இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "மார்க்சிய-பெரியாரிய பொது உடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
19 வயதில், தந்தை பெரியாரின் உரை கேட்டு, அவரது வழியைப் பின்பற்றி, வாழ்நாள் முழுமையும் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்தார். பெரியார் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாத காலம் சிறைத் தண்டனை பெற்றார். பிற்படுத்தப்பட்டோருக்கான சில அறக்கட்டளையின் அறங்காவலராக பணியாற்றினார். இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் பெரியார் கொள்கைகளை பரப்பினார்.
வடமாநிலங்களில் சமூகநீதிக் கருத்துகளை பரப்பி, மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேற்ற இவர் ஆற்றிய பணி மகத்தானது. சில இதழ்களில் அறிவார்ந்த கட்டுரைகளைத் தீட்டியுள்ளார். ‘ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ எனும் தலைப்பிலும் இவரின் அறிவார்ந்த நூல்கள் வெளிவந்துள்ளன.
வயது முதிர்ந்த நிலையிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும், தந்தை பெரியாரின் லட்சியங்களைப் பரப்பிடும் உணர்வோடு, பொது உடைமைக் கட்சித் தோழர்களையும், அம்பேத்கர் இயக்கத் தோழர்களையும் இணைத்துக் கொண்டு, லட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார்.
திராவிட இயக்க வரலாற்றில் அவரின் தனித்த புகழ் எந்நாளும் நிலைத்து நிற்கும். அவரின் உடல் அவரது விருப்பத்திற்கு இணங்க சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்படுகின்றது. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அனைவருக்கும், மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.