இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சமூக நீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து, மருத்துவக் கல்வி என்பது ஏழை, எளிய, கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் கனவிலும் எட்டாக் கனியாக ஆக்கிவிட்டது.
இதேநிலைமை தான் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளிலும் நிலவுகிறது. மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில், 50 விழுக்காடு அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவப் மேற்படிப்புக்கான இடங்கள் 1,758 இருக்கின்றன.
இதில் 50 விழுக்காடு இடங்கள், அதாவது 879 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்படுகிறது. இவ்வாறு மற்ற மாநிலங்களிலிருந்தும் அகில இந்தியத் தொகுப்புக் அளிக்கப்படும் இடங்களை நிரப்பும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக விடாப்பிடியாக மறுத்து வருகிறது.
இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 19,100 மருத்துவ மேற்படிப்புகளில், 50 விழுக்காடு, அதாவது 9,550 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 1352 இல் 50 விழுக்காடு
என 676 இடங்கள் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் 9,550 முதுநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடாக 2,578 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 371 இடங்களையே ஒதுக்கீடு செய்துள்ளது.