பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தரவிருக்கிறார். அவர் தமிழகம் வரும் போது மதிமுக சார்பாக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நான்கரை ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.
மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதிஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவிமயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப் பிடியில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது. காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற சனாதன மதவெறிக் கூட்டம், அவரது 71 ஆவது நினைவுநாளான ஜனவரி 30 ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம், அலிகாரில் இந்து மகாசபா அலுவலகம் எதிரே காந்திஜி உருவபொம்மையை வைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அதிலிருந்து இரத்தம் வழிந்தோடுவதைப் போன்று சித்தரித்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
காந்தி முதல் கௌரி லங்கேஷ் வரை சங்பரிவாரை எதிர்த்தவர்களைச் சுட்டுக் கொன்றும் இன்னும் அதே கொலைவெறி தணியவில்லை. நாடாளுமன்றத்திலேயே பா.ஜ.க. உறுப்பினர் சாக்சி மகராஜ், கோட்சேவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கூறினார். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு என்பது வெள்ளிடை மலை.