சென்னை:பெண் குழந்தைகள் மீது தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளைத் தடுக்க குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை, அன்றாடம் பதிவுசெய்யப்படுகின்ற போக்சோ வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.
கரோனா பொதுமுடக்கத்தின் விளைவாக வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் பணிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரசு நிதி உதவிகள் போதுமான அளவு கிடைக்கவில்லை. இக்கரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுவிட்டன.
இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, குடும்பத்தினரே பின்னணியாக இருந்தார்கள் என்பதை அறிவது வேதனையை ஏற்படுத்துகின்றது. இதன்காரணமாக, நாட்டில் நிலவுகின்ற வறுமையின் கொடுமையை உணர முடிகின்றது.