சென்னை:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமித்து முதலமைச்சர் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மன்றத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் என்ற இரு பதவிகளை வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி. என் பணிகளை சிறப்பாக செய்வேன்.
உறுப்பினர் சேர்க்கை
கடந்த 10 ஆண்டுகளாக வாரியத்தில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ரூ. 6 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 40,000 பேர் மட்டுமே வாரிய உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரையும் வாரியத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இ-சேவைக்குள் கலைஞர்கள் கொண்டு வரப்படுவார்கள். ஒவ்வொரு துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி சிறந்த கலைஞர்கள் மூலம் துறைகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச பஸ்பாஸ்
இதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும். ரூ. 6 லட்சம் கலைஞர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும். கலைமாமணி பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைகள் அழியாமல் புதிய கலைஞர்களை உருவாக்க கூத்துப்பட்டறையில் வழங்கப்படும் பயிற்சிகள் போன்று வழங்கப்படும்" என்றார்.
முன்னதாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அலுவலகத்திற்கு வந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாகை சந்திரசேகருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல்