கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்வது மற்றும் பரோல் வழங்குவது தொடர்பாகவும், சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தற்போது 13 ஆயிரத்து 854 கைதிகள் மட்டுமே உள்ளதாகவும், இது மொத்த எண்ணிக்கையான 23 ஆயிரத்து 592 கைதிகளில், 58.72 விழுக்காடு தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,295 சிறைக் கைதிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 38 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்றும் இது தவிர கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைதிகள் மட்டுமல்லாமல், சிறைப் பணியாளர்கள் 700 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறைப் பணியாளர்களையும், கைதிகளையும் முன்களப் பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டனர்.
மேலும், எதிர்காலத்தில் புதிதாக தொற்று பாதிப்பு அதிகமானால், சிறை கைதிகளைப் பரோலில் விடுவிப்பது தொடர்பாக முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
சிறைப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை - உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைப் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை - உயர் நீதிமன்றம் உத்தரவு
இதையும் படிங்க:இந்த மாசத்துக்கு இது போதும்' -ரேசனில் 14 பொருள்கள்