சென்னை: சுங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் மற்றும் கேண்டின் உள்ளிட்ட பல்வேறு 17 பணியிடங்களுக்குத் தேர்வுகள் நேற்று (அக்.14) நடத்தப்பட்டன. இதில் இறுதியாக 1,600 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்வில் சிலர் ப்ளூடூத் உள்ளிட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முறைகேடில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஹரியானாவைச் சேர்ந்த 26 நபர்களையும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மொத்தம் 28 நபர்கள் ப்ளூடூத்தைப் பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த 28 நபர்களையும் சுங்கத்துறை அலுவலர்கள் பிடித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஷேர் சிங் என்பவருக்குப் பதிலாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்வன் குமார் என்பவர் தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.