அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செலவினங்கள்: புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்த முழு விவரங்களுடன் கூடிய புதிய அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவதேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சௌந்தர்யா உள்ளிட்டோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிகளையும் வெளியிட வேண்டும் எனவும், தேர்விற்காகச் செலவிடப்பட்ட தொகை விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைகழகம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், தேர்வு நடத்துவதற்கான கட்டணமாக 118 கோடி ரூபாய் வசூலிக்கபட்டிருந்தாலும், தேர்வு நடத்த 141 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாகவும், அதுதவிர மறுமதிப்பீடு, மதிபெண் சான்று வழங்கும் பணிகள் இருப்பதாகவும், ஏற்கனவே வசூலித்ததிலேயே பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அனைவரின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டதாகவும், கட்டண வசூல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 23ஆம் தேதிக்கு முன்பே முடிந்துவிட்டதாகக் கூறி, பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அரசின் இந்த பதில் மனுவிற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தேர்வு நடைமுறைகளுக்கான செலவினங்களைக் குறிப்பிட்டு தெரிவுக்கும்படி உத்தரவிட்டும், அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் பொதுப்படையான விவரங்கள் மட்டுமே உள்ளதாகவும், முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், கல்லூரிகள் கட்டணம் வசூலித்து, அதைப் பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவில்லை என்றால், அத்தொகையை மாணவர்களுக்குத் திருப்பி செலுத்த சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செய்யாதது துரதிஷ்டவசமானது என்றார்.
பின்னர், தேர்வு நடைமுறைகளுக்கான செலவினங்களை முழு விவரங்களுடன் புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதி தள்ளிவைத்தார்.