சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று (22.3.2023) இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டன.
இந்திய பிரதமரால் 17.3.2023 அன்று ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்காக்கள் அமையவுள்ள 7 மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், இ. குமாரலிங்கபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சூழலில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்காவினை, இம்மாவட்டம் பெற்று இருக்கும் நூற்பாலைகள், சிறு தொழில்கள் வளர்ச்சி போன்ற கூடுதல் அம்சங்களின் அடிப்படையில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குப் பரிந்துரை செய்தது.
தொழில் துறையைப் பொறுத்தவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதிகளவில் வேலைவாய்ப்பு அளிப்பதும், அதிலும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பதால் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவானது மொத்தம் 2,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படும்.
இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, உடனடியாக தொழில் தொடங்க ஆயத்த தொழிற்கூடங்கள் (Plug & Play Factory Buildings), தொழில் பணியாளர்களுக்கான வீடுகள் (Industrial Housing), காற்றாலை மற்றும் சூரிய தகடு மின் உற்பத்தியை உள்ளடக்கிய பசுமை ஆற்றல் (Green Energy including Windmill and Solar Based Power Generation), உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா முழு அளவில் செயல்படும் போது சுமார் 2,00,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.
இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும், என மொத்தம்
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் 1,231 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ''தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும். நம் நாட்டின் கைத்தறித்துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்’ என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலம், சிறப்பான தொழில் கொள்கை, கல்வி மற்றும் ஆராய்ச்சி, முதலீட்டுக்கான உகந்த சூழல், உறுதியான உட்கட்டமைப்பு போன்ற அம்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், ஜவுளி மற்றும் ஆடைத் தயாரிப்பில் பெருமளவு முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பினை இயற்கையாகவே பெற்றுள்ளது.
சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற் பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது.