தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ - 70 நாள்களில் 1.76 லட்சம் மனுக்கள் ஏற்பு

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை தொடங்கப்பட்ட 70 நாள்களில், இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

By

Published : Jul 16, 2021, 2:17 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.16) ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கி சிறப்பித்தார். இத்திட்டத்தின் கீழ், இதுவரையில் மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 486 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 268 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு;

கட்டமைப்பு வசதிகள் கோரிய மனுக்கள் ஏற்பு

வருவாய்த் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட 52 ஆயிரத்து 434 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35 ஆயிரத்து 670 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மூலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட ஆறாயிரத்து 548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பான மூன்றாயிரத்து 909 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தொடர்பான ஆயிரத்து 889 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

நலத் திட்ட உதவிகள்

உள் துறையின் மூலம் ஆயிரத்து 162 மனுக்களுக்கும், இதர துறைகள் மூலம் 74 ஆயிரத்து 656 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பெறப்பட்ட இரண்டாயிரத்து 100 மனுக்களில் 986 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாற்றுத் திறனாளி பயனாளிகள் இன்று (ஜூலை.16) முதலமைச்சரிடமிருந்து நலத் திட்ட உதவிகளைப் பெற்றனர்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ தொடங்கப்பட்ட 70 நாள்களில், இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான ஒரு லட்சத்து 10 ஆயிரத்தைவிட கூடுதலாகும்.

மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாள்களில் தீர்வுகாண இத்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர், சதீஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 1,594 மனுக்களில் 1,188 மனுக்கள் மீது விசாரணை நிறைவு - தமிழ்நாடு காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details