இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்ற காரணத்தைக் கூறி மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென கூச்சமின்றி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அரசியல் அமைப்பின் அம்சங்களை குழிதோண்டிப் புதைப்பதாக தமிழகஅரசின் செயல்பாடு அமைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல சாக்கு போக்குகளை சொல்லி தமிழக அரசு மக்களின் அடிப்படை உரிமையாக உள்ள உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தாமல் தள்ளி வைத்துக் கொண்டுள்ளது. குக்கிராமங்கள் முதல் மாநகர் வரை மக்கள் பிரதிநிதிகள் தங்களை தாங்களே ஆண்டு கொள்வது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை கிடப்பில் போடுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையும், தன்னாட்சி உரிமையும் தட்டிப்பறிக்கும் காரியம் என்பதே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்தை ஆளும் அதிமுக தேர்தலில் மக்களை சந்திக்க திராணியற்ற நிலையில், இத்தகைய மோசடித்தனமான காரியத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜனநாயகத்தின் ஆணி வேராக திகழும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்த அமைப்புகளுக்கு முறையாக தேர்தல் நடைபெற்றால் மட்டுமே மத்திய அரசின் நிதி தடையின்றி கிடைக்கும் என கூறுகிறது. தொடர்ந்து ஆளும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைத்து வருவதன் காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி கிடைக்காமல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளமே நொறுங்கி விழும் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. மேலும் கழிவுநீர் அகற்றல், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தி அதிமுக அரசு மக்களை கொடுமைப்படுத்துகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியவில்லை என்று கூறுவது அரசின் திட்டமிட்ட மோசடியை பறைச்சாற்றுவதாக உள்ளது.
தமிழக அரசு வாக்காளர் பட்டியலை உடனடியாக இறுதி செய்து குறித்த காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை சிபிஎம் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அதிமுக அரசின் இந்த அலட்சிய போக்கினை கண்டித்தும், உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வற்புறுத்தியும் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.