சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்காக ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.