சென்னை:தமிழ் வரலாற்றை உலகறிய செய்யும் வகையிலும், மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கும் விதத்திலும், சென்னை இலக்கியத் திருவிழா 2023 தொடங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று (ஜனவரி 4) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி தாளாளர் விக்ரம் அகர்வால், பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனத் தலைவர் கோ.ஒளிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'வேறு எந்த மாநிலங்களிலும் இப்படியான இலக்கியத் திருவிழாக்கள் நடக்கிறதா, அதில் கல்லூரி மாணவர்களுக்கு இப்படியான போட்டிகளை, பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு இங்கு நடப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது.
நம் மொழியின் இலக்கிய செழுமையை, அதன் மரபை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். நம் நதி நாகரிக மரபு அடிப்படையில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் முதல் நிகழ்வாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’ திருநெல்வேலியில் கடந்த நவம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும், நம் பண்பாட்டையும், அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியை, நம் கலையை, இலக்கியத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு அக்கறையோடும் விடாப்பிடியாகவும் இருக்கிறார் என்பதற்கு இதுபோன்ற பல திட்டங்களை உதாரணங்களாக அடுக்கலாம். அதற்குக் காரணம் அவர் வந்த இயக்கம் அப்படிப்பட்டது. ஏனெனில் திராவிட இயக்கமே எழுதியும், பேசியும் வளர்ந்த இயக்கம் தானே.
பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் எழுதியதையும் பேசியதையும் தொகுத்தாலே நாம் எவ்வளவு போராட்டங்களை கடந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்பது தெரியும். ஏனெனில், இதற்கான வாசக வட்டம், இதை விரும்புபவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனாலும், இது நம் மாணவர்களுக்கு, நம் மண்ணுக்கு அவசியம் என்பதை உணர்ந்து எவ்வளவு நுணுக்கமாக கவனம் செலுத்தி, இதையும் செயலாக்கி வருகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.
நான் தீவிரமாக வாசிப்பவன் கிடையாது. ஆனால், சின்னச் சின்ன புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இலக்கியவாதிகளுடன் எனக்கு நல்ல பரிட்சயம் இருக்கிறது. அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். திமுகவில் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் சார்ந்த அமைச்சராகவும் இருப்பதால் நம் வரலாற்றை, கலையை, பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.