சென்னை: மாநகராட்சியில் 5 பள்ளிகளில் 3டி தொழில்நுட்பத்தில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் கற்பிக்கும் வசதியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். இந்த மெய்நிகர் வகுப்புகளில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட படங்களை மாணவர்கள் கருவியை பொருத்திக் கொண்டு பார்க்க முடியும்.
மெய்நிகர் வகுப்பிற்கான் கருவியை மாணவிகளுக்கு பொருத்தி விட்டு, சேப்பாக்கம் திருல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழியும் பொருத்திக் கொண்டு பார்த்தனர். அதன் பின்னர் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மெட்டா கல்வி புதிய முயற்சியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி இளைஞரணி தலைவராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் முடிந்து 4 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. அவர் 4 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார்.
விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை மாணவிகளுக்கு போட்டபோது கருணாநிதி கண்ணொளி திட்டத்தில் கண்ணாடி போட்டு விட்டது தான் ஞாபகத்திற்கு வந்தது. ஸ்மார்ட் ஆய்வகங்களில் படிக்கும் பொருள்களை தொட்டு பார்க்க முடியும். ஆனால் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனுபவமாக, நேரடியாக பார்க்க முடியும். தமிழ்நாட்டில் 38 ஆயிரம் பள்ளிகள் இருக்கிறது. அங்கு ஸ்டெம் லேப் ஆய்வகம் தொடங்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.