சென்னை: முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
திருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் இருக்கும் இடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், "முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத்தயார். நிரூபிக்கத் தவறினால் ராமதாசும் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகுவார்களா?" எனக் கேள்வியெழுப்பி முரசொலி நிலப் பட்டாவையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.