தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ரத்தானால் அந்த பெருமையை அதிமுகவிற்கு தந்துவிடுகிறேன் - அமைச்சர் உதயநிதி

NEET Exemption Movement: நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் எனவும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதிமுகவிற்கு அந்த பெருமையை தந்துவிடுவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு இயக்கத்திற்கு விசிகவிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் விலக்கு இயக்கத்திற்கு விசிகவிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:33 PM IST

நீட் விலக்கு இயக்கத்திற்கு விசிகவிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு கூட்டணி கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிச் தலைவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வரும் நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில், அதன் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “நீட் விலக்கு நம்முடைய இலக்கு என்ற நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்தைப் பெற்று இளைஞர் அணி மாநாட்டில், திமுக தலைவரிடம் அதனை அளிக்க இருக்கிறோம். தொடர்ந்து, நீட் தேர்வு தடை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தற்போது டெல்லியில் குடியரசு தலைவர் கையெழுத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நீட் தேர்வு காரணமாக 6 ஆண்டுகளில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த தேர்வால் அவர்களின் கனவு நசுக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பை தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 10 லட்சம் கையெழுத்து இதுவரை பெறப்பட்டு உள்ளது.

மேலும் இணைய தளத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். அனைத்து பொதுமக்கள் மற்றும் இயக்கத்திற்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். இது அனைத்து மாணவர்களுக்கான பிரச்சனை. எனவே அனைவரும் பங்கேற்க வேண்டும். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து கையெழுத்து பெற்றேன்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளேன். விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவரும் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றால் அனைவரும் இதில் கையெழுத்து இடவேண்டும்.

அதிமுக உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் (அனைத்து கட்சி) நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற வேண்டும். இதற்காக அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க இருக்கிறேன். முதலில் இளைஞர்கள் மாநாட்டில் இதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு டெல்லியில் சென்று ஒப்படைக்க இருக்கிறோம்.

சட்டமன்றத்தில் நீட் தடை மசோதா கொண்டு வரும் பொழுது, அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு உள்ளே நுழைந்தது. மேலும் அவர்கள் ஆட்சியில் இரண்டு முறை இந்த சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதை, வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

அதிமுக தற்போதாவது உண்மையாக இருக்க வேண்டும். நாங்கள் உண்மையாக போராடி வருகிறோம். இது எங்களது தனிப்பட்ட பிரச்னை இல்லை. இது மாணவர்களுக்கான பிரச்னை. மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதிமுகவிற்கு அந்த பெருமையை ( credit) தந்துவிடுகிறேன்.

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை சட்டப்படி சந்திக்கிறேன். அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்று வரும் நாளை போகும். இளைஞர் அணி செயலாளர் பதவி இன்று வரும் நாளை போகும். முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே இந்த குற்றசாட்டை நான் சட்டரீதியாக சந்திக்கிறேன்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது அந்தந்த மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றவாறு அனைத்தும் செய்து தரப்படும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில், நீட் தேர்வு ரத்து வேண்டும் என்றாலும், அதை செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். மாணவர்களை குழப்புவதற்காக எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு உயிர் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் தான் உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விறுவிறுப்படையும் ராஜஸ்தான் தேர்தல் களம்.. முதலமைச்சர் அசோக் கெலாட் வேட்பு மனுத் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details