சென்னை:13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனிடையே, இந்த ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவியலியன் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது சில ரசிகர்கள் அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது ”ஜெய் ஸ்ரீராம்" என பாடல் ஒலிக்கப்பட்டதும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் போற்றும் வகையில் பாடல் ஒலிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.