சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்றது. இதன் பதிலுரையின்போது பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில்தான். அதன் பின்னர், என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு, வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம்.
கோபாலபுரத்தில் இருக்கும்போது, சின்ன வயதில் நானும், அன்பில் மகேஸும் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவர் எங்களுக்கு பந்தை போடுவார். பேட்டிங் ஆடி விட்டு அவர் சென்று விடுவார். கருணாநிதியோடு மட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் உடனும் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இன்னும் சொல்லப் போனால், முதலமைச்சர் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினால், யாராலும் ஆட முடியாது.
இங்கே எப்படி சிக்சர் அடிக்கிறாரோ, அதே போலத்தான் பந்து வீச்சிலும். எனக்கு இந்த விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொடுத்து இன்று பதிலுரை அளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். இதனையடுத்து ஐபிஎல் போட்டிக்கு பாஸ்கள் வழங்க வேண்டும் வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “4 வருடங்களாக அங்கு போட்டிகள் நடக்கவில்லை. யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.
என்னுடைய சொந்த செலவில், ஒவ்வொரு போட்டிக்கும் என்னுடைய தொகுதியில் இருந்து 150 கிரிக்கெட் வீரர்களை டிக்கெட் வாங்கி, அவர்களை கூட்டிச் சென்று பார்க்க வைக்கிறேன். ஐபிஎல் நடத்துவது, உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்ஷா உடைய மகன் ஜெய்ஷாதான். அவர்தான் பிசிசிஐ மூலமாக ஐபிஎல் போட்டியை நடத்துகிறார். நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார்.