சென்னை:உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆவது இடம் பிடித்த தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் இந்தியாவின் முதன்மை நிலை வீரர் குகேஷ் ஆகியோருக்கு முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியின் சார்பாக பாராட்டு மற்றும் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பரிசு அளித்த பின்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். தினமும் ஊடகவியலாளர்களை சந்திக்கிறீர்கள் அதுவும் சிரித்துக்கொண்டே அவர்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கிறீர்கள் அது எப்படி? என மாணவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “மக்களுக்காக உழைக்கிறோம், உண்மையாக உழைக்கிறோம், அதனால் இன்முகத்தோடு பதில் அளிக்கிறோம். அது மட்டுமில்லாமல் நான் தினமும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்துகளை படிக்கிறேன். அவர் பேசியதை கேட்கிறேன் அதிலிருந்து தான் நான் பதில் அளிக்கிறேன்.
அதேபோல் பிரக்ஞானந்தாவும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் தான். ஏனென்றால் சர்வதேச அளவில் விளையாடிய போது சில வெற்றி, தோல்விகளை சாதாரணமாக சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொள்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது நான் இப்படி இருக்கிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர் ஒருவர், ‘இதற்கு முன்பு சினிமாவில் இருந்தீர்கள் தற்போது அரசியலுக்குள் நுழைந்து இருக்கீங்க இது எப்படி பார்க்கிறீங்க இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?’ என்கிற கேள்விக்கு, “சினிமாவில் ஸ்கிரிப்ட் இருக்கும் அதன்படி நடக்க வேண்டும். ஆனால் அதில் தவறு செய்தால் ரீடேக் எடுக்கலாம் வாழ்க்கையில் அப்படி கிடையாது அரசியலில் நடிக்க முடியாது” என்றார்.
பின், மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இங்கு சிலர் நித்யானந்தாவை உருவாக்குகிறார்கள். ஆனால் அமைச்சர் உதயநிதி உலக அரங்கில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா போன்றோரை உருவாக்குகிறார். அது மட்டுமில்லாமல் கரிகால சோழன் கல்லணை கட்டினார், ராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டினார், திருக்குவளை தந்த கலைஞர் கருணாநிதி, சோழனின் பேரன் தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கத்தை உருவாக்கி வருகிறார்” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, “என் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கு போட்டு இருப்பது குறித்து நான் இன்னும் அறியவில்லை. அப்படி இருந்தால் எனது வழக்கறிஞர்களிடம் கேட்கிறேன். எனக்கு 10 கோடி, 10 லட்சம் விதித்தது போக இப்போ ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை நான் தரம் குறைவாக பேசவில்லை. ஒருவேளை நான் சனாதனம் குறித்து பேசியதால் அவரது மனம் கஷ்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அண்ணாமலை போராட்டம், பேட்டி குறித்த செய்தி பார்க்கவில்லை. கொசுவர்த்தி சுருள் பதிவு தொடர்பாக பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்” என அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் தீவிரமடையும் கொசு ஒழிப்பு பணிகள்.. மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!