சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், கடந்த வாரம் வெளியான படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு வித்தியாசமான வேடத்தில் நடித்துக் கலக்கியிருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் இன்றுவரை தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு இப்படியும் நடிப்பாரா என்று வியந்தபடி தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஃபகத் ஃபாசில் நடிப்பும் உதயநிதியின் நடிப்பும் இப்படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது படங்களில் பட்டியல் இன மக்களின் வலியையும், அவர்களது வாழ்க்கையையும் பதிவு செய்து வருபவர். இதிலும் அதே போன்ற கதையை பதிவு செய்துள்ளார். ஆதிக்க சாதியினர் எப்படி ஒடுக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் ஒடுக்குகின்றனர் என்றும், அரசியலில் தனித் தொகுதி என்பது பெயரளவிற்குத்தான், அவர்களும் ஆதிக்க சாதியினரிடம் அடங்கிப் போக வேண்டிய நிலைதான் என்பது இன்றுவரை இச்சமூகத்தில் இருக்கிறது என்று இப்படத்தின் மூலம் சொல்லியுள்ளார்.