சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் ஏரிக்கரை தெருவில் உள்ள காலி மைதானத்தில் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 6 மாணவர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது திடீரென மழை வந்தது. இதையடுத்து அந்த மாணவர்கள் மழையில் நனையாமல் இருக்க அருகில் இருந்த ஒரு வீட்டின் படிக்கட்டு பக்கவாட்டின் கீழே சென்று அமர்ந்துள்ளனர்.
பின்னர், அங்கே அமர்ந்திருந்த 3 மாணவர்கள் மீண்டும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது மழை பெய்த சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக படிக்கட்டு திடீரென சரிந்து அவர்கள் மேலே விழுந்துள்ளது. அதனைக் கண்ட மற்ற இளைஞர்கள் அருகில் இருந்த நபர்களை உதவிக்காக அழைத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் சேலையூர் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து விட்டு, இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், ஒரு நபருக்கு லேசான காயமும் மற்ற 2 நபர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி (JCP) வாகனத்தின் மூலம் படிக்கட்டுகளை அகற்றி 3 நபர்களையும் மீட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படுகாயமடைந்த 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பிரஞ்சு ஜெஃப்ரி தவமணி (வயது 23), மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமோ மில்கி (வயது 19) என்பதும், மேலும் காயப்பட்ட நபர் அஷ்வின் (வயது 19) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி (B.Sc Hospitality Tourism) படித்து வந்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று இவர்கள் கல்லூரி வகுப்பிற்குச் செல்லாமல் மது அருந்த வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தற்போது இந்த விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மது குடிக்கும்போது, மழை வந்ததால் நனையாமல் இருக்க வீட்டின் படிக்கட்டுகள் கீழ் ஒதுங்கிய போது படிக்கட்டு உடைந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குதிரை கடித்ததில் மூவர் படுகாயம்: பொதுமக்கள் துரத்திச் சென்றதில் கீழே விழுந்த குதிரை உயிரிழப்பு!