சென்னையில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் தி.நகர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, திருட்டு போன இருசக்கர வாகனங்களை 1 மாத காலமாக தேடி வந்தனர்.
அதிலும் குறிப்பாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள இருசக்கர வாகனங்கள், கோயம்பேடு பார்க்கிங்கில் நீண்ட நாள்களாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் உள்பட முக்கியமான வாகன நிறுத்துமிடங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அதுமட்டுமில்லாமல் தெருக்களில் சந்தேகப்படும்படியாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் என மொத்தம், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையிட்டு 250 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, அதன் பதிவு எண்கள் மற்றும் விவரங்களை காவல் துறையினர் சேகரித்துள்ளனர்.
மேலும் அந்த பதிவு எண்களை வைத்து தமிழ்நாடு காவல் துறை சி.சி.டி.என்.எஸ் செயலியில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருக்கும் வாகன பதிவு எண்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது 18 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்கள் என தெரியவந்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:மது அருந்த சிறுவர்களை அனுமதித்த பார் மீது வழக்குப்பதிவு!