சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவலர்கள் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்ததாக புகார்களின் கூறப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாசன்(25), சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சக்திவேல்(22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவ்விருவரையும் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், கவிதாசனுக்கு திருமணமாகி லதா என்ற மனைவி இருப்பதும், கடந்த 2019ஆம் ஆண்டு மனைவியை தாக்கிய வழக்கில் சிறைக்குச் சென்ற அவர், அதன்பின்பு மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
சென்னையில், கால்வாய் தோண்டும் பணி செய்துவந்த கவிதாசனுக்கு சக்திவேலின் பழக்கம் கிடைத்த நிலையில், இருவரும் சேர்ந்து சாலையில் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவலர்கள், அவர்களிடமிருந்து 5 ஆன்ராய்டு செல்போன்களையும், பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:குடும்ப தகராறு - பெண்ணை வெட்டிய இளைஞர்கள் கைது