சென்னை: பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து சுகாதாரத் துறை பிரிவில் பணி புரியும் அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு சோதனை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
கடையில் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் விற்பனைக்கு உள்ளதாக குற்றம் சாட்டிய இருவரும் அதற்கான அபராதமாக 30ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், அபராத தொகைக்கான ரசீது எதுவும் அவர்களிடம் கையில் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த வியாபாரி மிட்டல் லால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். பின்னர் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இருவரும் மாநகராட்சியில் பணிபுரியவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.