சென்னை:அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ஐயானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றை செகந்தராபாத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதன்படி கடந்த டிச.20ஆம் தேதி movemycar.in என்ற இணையதளத்தின் மூலம் காரை டெலிவரி செய்வதற்காக, ஆன்லைனில் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து தேடி உள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணா மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரோனக் என்பவர் மோகன் ஐயானியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது 5,800 ரூபாய்க்கு காரை சென்னையில் இருந்து செகந்திராபாத் எடுத்துச் செல்ல ரோனக் முன் வந்ததால், அதற்கு மோகன் ஐயானி சம்மதித்துள்ளார்.
இதன்படி அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிரவீன் சிங் என்பவர், சென்னை அயனாவரத்தில் இருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் காரை டெலிவரி செய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மோகன் ஐயானி தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது காரை உரிய இடத்தில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் 80,000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோகன் ஐயானி, இதுகுறித்து கீழ்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து பெங்களூருக்குச் சென்றனர்.