சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் லட்சுமி என்பவர், கடந்த 14ஆம் தேதி நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர். இந்தப் பறிப்புச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் லட்சுமி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும், இருவரும் தலைக்கவசம் அணிந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் கொள்ளையர்களைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக இருந்த போதிலும், கொள்ளையர்கள் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். சைதாப்பேட்டை முதல் மாதவரம் வரை 22 கிலோமீட்டர் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இருப்பினும், வாகனப் பதிவு எண் இல்லாததால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அடுத்தகட்டமாக பழைய குற்றவாளிகள், பொதுமக்களிடம் அடையாளங்களைக் கூறியும், சிசிடிவி பதிவான உருவங்களை காட்டியும் மாதவரம் முதல் கொடுங்கையூர் வரையுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி (22) மற்றும் இளந்திரையன் (23) ஆகிய இருவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.