சென்னை: பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23). இவர் மேற்கு மாம்பலம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலை முடித்து விட்டு வீட்டிற்கும் திரும்பும் வழியில் ஏரிக்கரை சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் மெதுவாக நடந்தபடி செல்போன் பேசிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது திடீரென செல்போனை கீழே போட்டு விட்டு அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் அசோக் நகர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், தண்ணீரில் கிடந்த செல்போனை எடுத்த போது செல்போன் ஆப் ஆகாமல் லேசாகக் கருகிய நிலையில் இருந்துள்ளது. அதன்பின், காவல் துறை செல்போனை துணியில் சுற்றிக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் மழையில் செல்போன் பேசிக்கொண்டு சென்றபோது, செல்போன் வெடித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பின் முழு விவரம் தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.