சென்னை:பெருநகரில் போதை தடுப்பு நடவடிக்கைக்காக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் புழுதிவாக்கம், பாலாஜி நகர் 23-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைக்காக பயன்படுத்தும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பதுக்கி வைத்திருப்பதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச்சென்ற மதுவிலக்கு பிரிவு போலீசார் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த பிரவீன் குமார்(25), கண்ணதாசன் நகரைச்சேர்ந்த மகேஷ் (32)இருவரை கைது செய்தனர்.
மேலும் இருவரிடமிருந்து 523 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரவீன் குமார் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் மும்பையில் இருந்து உடல் வலி நிவாரணம் மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் போதைக்காக பயன்படுத்துபவருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:துறையூர் கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது