சென்னை பெருங்குடி மண்டலத்தில் மைக்ரோ மேலாண்மை திட்டத்தின் (division level micro plan) கீழ் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி களப்பணியாளர்கள், அலுவலர்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டுமென என ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று அறிவுரைகள் வழங்கினார். அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் சென்னையில் உள்ள 200 வார்டுக்கும் துணை பொறியாளர், வார்டு தலைமை அலுவலர், சுகாதார அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் என தனித்தனியாக பணியமர்த்தப்பட்டு மைக்ரோ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது மட்டுமின்றி ஒரு வார்டுக்கு ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என உதவி பொறியாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்குத் தேவையான உதவி செய்வது போன்ற பணிகளில் சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர்களும் ஈடுபடுவார்கள்.
அடுத்ததாக, வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை தனிமைப்படுத்தியுள்ளோம். அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களை நியமித்து உள்ளோம். அந்த தன்னார்வலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தருவது போன்ற உதவிகளை செய்து வருவார்கள் இதை அனைத்தும் வருவாய்த்துறை அலுவலர் தினமும் ஆய்வு மேற்கொள்வார்.