சென்னை: மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 70க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த மனோஜ்(25), அவரது நண்பர் விக்னேஷ்(25), ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இருவரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குடியாத்தம் பகுதியை சேர்ந்த இருவரும் சிறுவயது முதலே நண்பர்களாக ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து வந்துள்ளனர். பின்னர் மனோஜின் நடவடிக்கை சரி இல்லாததால் விக்னேஷை அவரது பெற்றோர் வேலூருக்கு அழைத்து சென்று விட்டனர். இருப்பினும் தனது பள்ளி நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் இருவரும் மீண்டும் நட்பு வட்டாரத்திற்குள் வந்துள்ளனர்.
தங்களது உல்லாச வாழ்க்கைக்கு பணம் ஒரு தடையாக இருப்பதாலும், குறும்படங்கள் எடுப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்த நிலையில் நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தை பார்த்துள்ளனர். அதில் போலீசுக்கு சவால் விடும் வகையில் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்று வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு, இளைஞர்கள் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதனை பார்த்துவிட்டு இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.