Ambattur AC Fire accident சென்னை:அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ஹாலினா (வயது 50). இவருடைய மகள் நஸ்ரியா (வயது 16). இவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தாய், மகள் இருவரும் நேற்று (செப். 29) இரவு ஏசி போட்டுக் கொண்டு அறையில் தூங்கிக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது அவர்களுடைய வீட்டில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது படுக்கை அறையில் ஹாலினாவும், நஸ்ரியாவும் தீயில் கருகி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரது உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும், தாய், மகள் இருவரும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி! முறையற்ற சிகிச்சை காரணமா? பெற்றோர் தர்ணா!