தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்குத் தடை!

சென்னை: ஒரு கிலோ மீட்டருக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

chennai high court

By

Published : Sep 11, 2019, 7:13 PM IST

பாறைகளை ஜல்லிகளாக உடைக்க அமைக்கப்பட்டுள்ள கல் அரைக்கும் யூனிட்டுகளால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில நிபந்தனைகள் கொண்டு வந்தது.

அதன்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், புனித ஸ்தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைக்கக் கூடாது எனவும், இரண்டு யூனிட்டுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. எம்-சாண்ட் மற்றும் ஜல்லியின் உற்பத்தியை அதிகரிக்க இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கல் அரைக்கும் உரிமையாளர் சங்கத்தினர் ஏற்கனவே தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் அமைச்சர் பரிந்துரையின் பெயரிலேயே மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவு பிறப்பித்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனைக்கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டனர். அதுவரை, ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details