சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசிஷ் குஹா ராய் (52). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அகமதாபாத் மாநகர பொருளாதார குற்ற பிரிவு போலீசால், போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, மிரட்டுதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து இவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக போலீஸார் தேடி வந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஆசிஷ் குஹாராய், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிக்கிறார் என்ற தகவல் போலிஸாருக்கு கிடைத்தது. இதை அடுத்து அகமதாபாத் மாநகர போலீஸ் ஆணையர், ஆசிஷ் குஹாராயை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து இலங்கை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான, பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து வந்தனர். அப்போது அங்கு இலங்கைக்கு தப்பி செல்வதற்காக, போலி பாஸ்போர்ட் வழக்கில் தேடப்பட்டு வரும் ஆசிஷ் குஹாராய் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் அதிகாரிகள் பரிசோதித்த போது, இவர் இரண்டு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதை அடுத்து, ஆசிஷ் குஹாராய் பயணத்தை, குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை பிடித்து ஒரு அறையில் அடைத்தனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார் என்ற தகவலை, அகமதாபாத் மாநகர காவல் ஆணையரகத்துக்குத் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கிருந்து தனிப்படை போலீஸார் சென்னை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (29). இவர் மீது கடந்த ஆண்டு மே மாதம் விசாகப்பட்டினம் போலீஸால், வரதட்சணை கொடுமை, கட்டாய கருகலைப்பு, மிரட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸார் இவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் போலீஸிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.