செல்ஃபோன்கள் திருடிய இருவர் கைது - செல்போன் திருட்டு
சென்னை: திருவான்மியூர் பகுதியில் தொடர்ந்து செல்ஃபோன் கடையை உடைத்து செல்ஃபோன்கள் திருடி வந்த இருவரை காவல் துறையினர் சிசிடிவி உதவியுடன் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் அருண்குமார் என்பவர் செல்ஃபோன் கடை நடத்தி வந்துள்ளார். ஜூலை மாதம் 3ஆம் தேதி வழக்கம் போல் தனது செல்ஃபோன் கடையை மூடிவிட்டு மறுநாள் கடையை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்க்கும்போது சர்வீஸூக்காக வைத்திருந்த செல்ஃபோன்களை சில நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதனால் உடனடியாக அருண்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். இதேபோன்று இந்திரா நகர், புத்திரன்கன்னி இடத்திலும் செல்ஃபோன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இடங்களிலும் ஒரே நபர்கள் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து செல்ஃபோன் கடையை கொள்ளையடித்த பின்பு அந்த நபர்கள் செல்லும் இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாறு, கிண்டி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம் வழியாக சென்றது தெரியவந்தது.
மேலும் கடையில் கொள்ளையடித்து சென்றது மடிப்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக்(20), மற்றும் 17 வயது சிறுவன் என கண்டுபிடிக்கப்பட்டது. நடுக்குப்பம் பகுதியில் வைத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் இருசக்கர வாகனம், செல்ஃபோன் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.