கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரைசெய்யப்பட்டு, நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்டுவருகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் இம்மருந்துக்கு, மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் அதை கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். அவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கைதுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டும்வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் அதிகரிக்கும் ரெம்டெசிவிர் விற்பனை: மருத்துவர் உள்பட இருவர் கைது! இந்நிலையில் சென்னை பல்லாவரம் அரைவா சிக்னல் அருகே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரிடமிருந்து 22 ரெம்டெசிவிர் மருந்தை 11 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, 12 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவர் ஜான் கிங்ஸ்லி விற்க முயன்றார். தகவலறிந்து விரைந்த குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தன்ராஜ் மருத்துவர் ஜான் கிங்ஸ்லியை கைதுசெய்து பல்லாவரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
மேலும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற பெருமாள் என்பவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 22 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல்செய்யப்பட்டு, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.