சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்று (ஜூன் 19) முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு செம்பியம் எம்டிஎச் சாலையில் கார் ஒன்று அருகிலிருந்தப் பழக்கடையின் மீது மோதியுள்ளது.
அதனால் கடை உரிமையாளர் காரை ஓட்டிவந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மதுபோதையிலிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தலைமை செயலக காலனி காவல் துறையினர் காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரது காரை சோதனையிட்டனர். அப்போது காரில் 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் செம்பியத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் (50) என்பதும், அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதும் தெரியவந்தது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், ஓட்டேரி கே.எச். சாலையில் நேற்று இரவு நீண்ட நேரமாக சாலையில் நின்றுகொண்டிருந்த காரையும், இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் சோதனையிட்டதில், 105 மது பாட்டில்கள் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் (32) என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:விழுப்புரம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்