சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் 15 வயது மகள், ஆயிரம்விளக்கு பைக்ராஸ் கார்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் பள்ளியில் இருந்து வெளியே வரும்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பள்ளி மாணவியை நிறுத்தி, 'தான் உன் தாயாரின் தோழி' எனக் கூறி, ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் மாணவி பள்ளி முடிந்து எப்போதும் வேனில் தான் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அதைபோல வேன் ஓட்டுநர் கணேசன் என்பவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது மாணவியைக் காணவில்லை. இதைடுத்து மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து, பள்ளி முடிந்தும் மாணவி வேனிற்கு வரவில்லை எனக் கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்குச்சென்று, மகளைத் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவியின் தந்தைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய பெண் ஒருவர், 'உன் மகளைக் கடத்தி வைத்துள்ளேன். 10 லட்சம் ரூபாய் தந்தால் நான் விட்டு விடுவேன்' எனக் கூறி மிரட்டிவிட்டு, இணைப்பைத்துண்டித்துவிட்டார். இதனால் பயந்து போன மாணவியின் தந்தை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை காவல் துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிரத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆட்டோவில் வைத்து மாணவி கடத்தல்:பணம் கேட்டு மிரட்டிய பெண்ணின் செல்ஃபோன் எண் சிக்னலை வைத்து சைபர் பிரிவு அதிகாரிகள் மூலம் கண்காணித்து பின் தொடர்ந்தனர். மேலும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து எந்த ஆட்டோவில் மாணவி கடத்தப்பட்டார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தந்தைக்கு மீண்டும் செல்ஃபோனில் தொடர்புகொண்ட கடத்தல் பெண், “உங்களுக்கு அரைமணி நேரம் தான் உள்ளது. கேட்ட பணத்தை கொடுக்க வேண்டும்” என மிரட்டினார். அதற்கு தன்னிடம் 2 லட்சம் ரூபாய் தான் இருப்பதாக மாணவியின் தந்தை கூறினார். தொடர்ந்து, பணத்தைக்கொடுக்க வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு, அப்பெண் செல்ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
உடனடியாக அப்பெண் கூறிய இடத்திற்குச் சென்று சுற்றி வளைத்துவிடலாம் என காவல் துறையினர் திட்டம் தீட்டினர். இதற்கிடையில் கடத்தல் பெண், மாணவியை ஆட்டோவில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். மீண்டும் தொடர்பு கொண்டு கடத்தல் பெண், மாணவியின் தந்தையை பணத்துடன் ஆழ்வார்ப்பேட்டை பகுதிக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் கோடம்பாக்கம் பகுதிக்கு வருமாறு அப்பெண் அலைக்கழித்துள்ளார்.
காவல் துறையிடம் சிக்கிய கடத்தல் பெண்:பின்னர், பேசிய அந்த பெண், வடபழனி 100 அடி சாலையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிரே இருக்கும் பர்னிச்சர் கடையில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக்கொடுத்துவிட்டு மகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி பர்னிச்சர் கடையிலுள்ள ஒருவரிடம் மாணவியின் தந்தை பணத்தை கொடுத்தார். பின்னர், அவருக்கு தொடர்புகொண்ட கடத்தல் பெண், தங்கள் மகள் வடபழனி சிக்னல் அருகில் நின்று கொண்டிருப்பதாகக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.