21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை:இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்(ஐசிஎப்) சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் இன்று (நவ.30) நடைபெற்றது.
சர்வதேச திரைப்பட விழாவின் பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட ஜூரி உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் திரைப்பட விழா மற்றும் அதில் திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்(ஐசிஎப்) சார்பில் 2003ஆம் ஆண்டிலிருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்படும்.
இதில், தேர்வாகும் சிறந்த படங்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 21வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவிற்காக 57 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில், இருந்து ஜூரி மூலம் சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, 25 தமிழ்ப் படங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சிறந்த 12 படங்கள் தேர்வாகியுள்ளன.
மேலும், உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
- பாலகம்: வேணு யெல்டான்டியின் குழு (தெலுங்கு)
- மனஸ்: பாபு திருவல்லா எழுதிய மனம் (மலையாளம்)
தமிழ் சினிமாவில் இருந்து தேர்வான 12 படங்களிலிருந்து சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளதாகக் கூறியுள்ளனர். உலக சினிமாவில் தேர்வாகும் சிறந்த 3 படங்களுக்குக் கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
போட்டிப் பிரிவில் திரையிட தேர்வான படங்கள் 2022 அக்டோபர் 16 முதல் 2023 அக்டோபர் 15 வரை சென்சார் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், போட்டிக்கு அனுப்பப்பட்ட 25 தமிழ்ப் படங்களிலிருந்து 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போட்டிப் பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்:
1. வசந்தபாலனின் 'அநீதி'
2. மந்திரமூர்த்தியின் 'அயோத்தி'
3 .தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'
4. மாரி செல்வராஜின் 'மாமன்னன்'
5. விக்னேஷ் ராஜாவின் 'போர் தோழில்'
6. விக்ரம் சுகுமாரனின் 'ராவண கோட்டம்'
7. அனிலின் 'சாயாவனம்'
8. பிரபு சாலமனின் 'செம்பி'
9. சந்தோஷ் நம்பிராஜனின் 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்'
10. கார்த்திக் சீனிவாசனின் 'உடன்பால்'
11. வெற்றிமாறனின் 'விடுதலை' பார்ட் 1
12. அமுதவாணனின் 'விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3'
தமிழில் இயக்குநர் மோகன் ராஜா, உலக சினிமாவில் யூகி சேது ஆகியோர் ஜூரி உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த திரைப்பட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்கள், இயக்குநர்கள், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த திரைப்படங்களின் தேர்வுக்குத் தமிழ்ப் படங்கள் அனுப்பக் கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்துள்ள ’காதலிக்க நேரமில்லை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!