முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்தது. அதில் ஒரு அணியாக சசிகலா சிறை சென்ற பின் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக கட்சி உருவானது. கட்சியை உருவாக்கிய கையோடு, தமது கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவும் பொதுச்சின்னம் வழங்கவும் தினகரன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
கடந்த தேர்தலில் சில பிரச்னைகளால் அமமுகவுக்கு பொதுச்சின்னம் மறுக்கப்பட்டது. இதற்கிடையே, அமமுகவிலிருந்து விலகிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்கக் கூடாது என்றும் அரசியல் கட்சியாக பதிவுசெய்யக் கூடாது என்றும் கூறி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு குறித்து நீதிமன்றம் தினகரன் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் பொதுச்சின்னத்தில் போட்டியிடாத அமமுக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பொதுச்சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமமுக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவை அரசியல் கட்சியாக பதிவுசெய்ய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அக்கட்சி சார்பில் பதிவு செய்யப்பட்டது. தற்போது அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் வெளியிடும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா சமாதிக்கு நடந்துகூட செல்லாத தினகரன்' - விளாசி தள்ளிய புகழேந்தி!