இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
'தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்கள் என்று முழங்கி, சமுதாய சமநிலைக்காகவும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை களைவதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, ஆங்கில ஆதிக்கத்தை விரட்ட வீறு கொண்ட சுதந்திர போராட்ட வீரராக, சகோதர நேசம் கொண்டு, எக்குலமும் போற்றும் ஒப்பற்ற மாமனிதராக திகழ்ந்த தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை என்பது வளரும் தலைமுறையினர் அனைவரும் அறியவேண்டிய அரும்பெரும் வரலாறு.
பெருமைமிகு அவ்வரலாற்றை ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து நீக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தேன். மேலும் பலதரப்பட்ட மக்களும் அக்கருத்தையே தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வழக்கு எழுந்தபோது நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அவரது வரலாற்றை இடம் பெறச் செய்வோம் என்று தெரிவித்திருந்தது.
இச்சூழலில், ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் சேர்ப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் திருமகனார் வாழ்க்கை வரலாற்றில், அவரது பெயரை உ. முத்துராமலிங்க தேவர் என்பதற்கு மாறாக உ. முத்துராமலிங்கர் என்று அச்சிட்டுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது.
பசும்பொன் தேவர் திருமகனாரின் வரலாற்றுப் பதிவுகளிலும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற ஆவணங்களிலும், அத்திருமகனாருக்கு மத்திய அரசு தபால் தலை வெளியிட்டபோதும் உ. முத்துராமலிங்க தேவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையும், வரலாறும் இவ்வாறிருக்க ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உ. முத்துராமலிங்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அவரது புகழையும் அடையாளத்தையும் மறைக்கும் முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.
இது உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அரசு ஆவணங்களில் உள்ளதுபோல் உ. முத்துராமலிங்க தேவர் என்றே அவரது திருப்பெயரை திருத்தியமைத்து ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அச்சிடவேண்டும். தேசம் காத்த செம்மல் என்ற பெயரிலியே அவரது வரலாறு இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.