மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால், உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு பதிலளிக்க தனது மூன்று முதல் நான்கு வாரம் வரையிலான கால அவகாசம் தேவை எனக் கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த பதில் குறித்து கருத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45 நாள்களாகிவிட்டது. இந்நிலையில், அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.
மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.