மே தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மே தினத்தையொட்டி உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். உழைப்பதற்குக் கிடைக்க வேண்டிய அத்தனையையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும், அரசும்தான் சிறந்ததாகத் திகழ முடியும் என்றும், சமீபத்திய ஆண்டுகளாக எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு உழைப்பவர்கள் தள்ளப்பட்டார்கள் என அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, தூக்கி எரியும் நிலை இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமின்றி அறிவுசார் துறைகளில் உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தடையிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
"உழைப்புச் சுரண்டலை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் உழைப்பவருக்கு எங்கும் முதல் மரியாதை என்பதை நடைமுறையாகவும் 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே' என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படப் பாடல் வரிகளை மெய்ப்படவேண்டும்." என்று அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.