சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் 'சமவேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “தமிழக அரசு இந்த அளவிற்கு இந்த போராட்டத்தை விட்டு இருக்கக் கூடாது. தேர்தல் வாக்குறுதியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.
இவர்களின் நியாயமாக கோரிக்கை வைக்கிறார்கள். அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். மக்களை ஏமாற்றுவது தான் அரசின் கொள்கையாக இருந்தால் மக்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விடும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டு, தற்போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது இல்லை.
'சம வேலைக்குச் சம ஊதியம்' தான் அவர்கள் கேட்கிறார்கள். இதை அரசு செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக நான் மட்டுமின்றி அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து போராடக்கூடிய நிலை வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் இருப்பது தான் திராவிட மாடலா?.
நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என நினைத்தேன். ஆனால் கோரிக்கையை நிறைவேற்ற போதிய நிதி இல்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். கடலில் பேனா வைப்பதற்கு நிதி எங்கு இருந்து வந்தது. ஆசிரியர்களுக்கு வழங்குவதில் நிதி பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவதைக் கேட்கும் போது கேவலமாக இருக்கிறது.
புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வதற்கான மனநிலை தற்போது இல்லை. நான்கு நாட்களாக அகதிகள் போல் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். அதனால் புத்தாண்டு பரிசாக இவர்களின் கோரிக்கைகளை விரைந்து அரசு நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: ‘நான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை’ - குலாம் நபி ஆசாத் திட்டவட்டம்