காஞ்சிபுரம்:பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சமீபத்தில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு அவரது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டபோது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
இவ்வாறு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தூக்கி வீசப்பட்டு சாலை ஓரப்பள்ளத்தில் விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வரும் நிலையில் சமூக வலைதளவாசிகளிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வலது கை முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய டிடிஎஃப் வாசன் மீது தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் சென்றதாகவும், குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகத்தில் பயணித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி 279, 336 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.