சென்னை:திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழுத் தலைவராக 3வது முறையாக தொழில் அதிபர் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். இதனையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேகர்ரெட்டி பேசும்போது, "உளுந்தூர்பேட்டையில் பெருமாள் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும், தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் வழியில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டும் பணிகளும் தொடங்கப்படும். பக்தர்கள் 150 பேர் தங்கும் வகையில் சத்திரம் (விடுதி) அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “வரும் காலங்களில் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் திருமண உதவி செய்ய உள்ளோம். அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க இருக்கிறது. டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனம் சார்பில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் காசோலை நிதியை நன்கொடையாக வழங்கப்பட்டது. தி.நகரில் திருப்பதி கோயில் விரைவில் கட்டப்படப்பட உள்ளது. இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது.