சென்னை:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் சேகர் தேஷ்முக் நேற்று (நவ.08) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2023 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடர்பாக பெருநகர ஆணையரின் அறிவுறுத்தலின்படி, 12 காவல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி மாவட்டத்தில் அதற்கான பணியை செய்து வருகிறோம். மழைக் காலங்களில் எங்கெங்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்று கணக்கெடுத்து, அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் 044-23452437 என்ற பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்தால், அவர்களுக்கு உடனடியாக உதவப்படும் என்றார்.
இதையும் படிங்க:நெல்லை மாநகராட்சி கூட்டத்தைப் புறக்கணித்த கவுன்சிலர்கள்.. தீபாவளி கமிஷன் தான் காரணமா..? பின்னணி என்ன?
தொடர்ந்து பேசிய அவர், குழுவில் 11 பேர் உள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பயிற்சி பெற்ற காவலர்களை நாங்கள் கண்டறிந்து வைத்துள்ளோம். அவசரக் காலங்களில் தேவைப்பட்டால் அவர்களையும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்துவோம். அதனைத் தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயாராக உள்ளன என்று கூறினார்.
மேலும், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்படும் இடங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே, அந்த இடங்களில் உடனடியாக பம்புகளை வைத்து தண்ணீரை எடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். மேலும், காவல்துறை அதிகாரிகள், மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். மழைநீர் பாதிப்பின் போது, ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆயுதப்படை போலீசாரை நாங்கள் கண்டறிந்து அவர்களை அழைத்து மீட்பு பணிக்காக பயன்படுத்துவோம். தேவைப்பட்டால் மீனவர்களை அழைத்து அவர்களிடம் உதவி கேட்போம்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் உட்பட கூடுதல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே ரயில்வே அறிவிப்பு