சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே கடந்த 16 ஆம் தேதி ஆட்டோ ராஜா என்ற ரவுடியை, மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜாம்பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
பின்னர் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா மற்றும் தேவா உட்பட 11 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஐந்து கத்திகள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா விற்பனை தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை ரவுடிகளான சூர்யா மற்றும் தேவா ஆகியோர் அவர்களது கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஸ்டாலினை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் சூர்யா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக சூர்யா இருந்து வருகிறார்.
மேலும் ஆட்டோ ராஜா மற்றும் சூர்யா தரப்பினரிடையே கஞ்சா விற்பனை தகராறு நிலவி வருவதாகவும், மோதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை காவல் ஆய்வாளருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியினால் ஆட்டோ டிரைவர் கொலை... போலீசார் விசாரணை