சென்னை:போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை 6 வது முறையாக நடைபெற்றது. பின்னர் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. போக்குவரத்து துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்வு அரசு ஊழியர்கள் ஆக்குவதே. அதன் மூலம்தான் ஊதியமும், ஓய்வூதியமும் பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும்.
1972 க்கு முன்பு போக்குவரத்துத்துறை அரசுத்துறையாகத்தான் இருந்தது. கருணாநிதி தான் அதை பொதுத்துறையாக மாற்றினார். தற்போது போக்குவரத்துத்துறையில் 1 லட்சம் ஊழியர்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். 85 ஆயிரத்திற்கு மேல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளனர்.
இவர்களது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் பெரும் முதலீடுகளை அளித்தால் கூட முடியாது. எனவே அதை அரசு துறையாக மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது கோரிக்கை வைத்தோம்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கோரிக்கை அவரும் 110 விதியின் கீழே அறிவிப்பதாக இருந்தார். பின் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை அறிவிக்க முடியாமல் போய்விட்டது. கடந்த ஆட்சியில் தற்போதைய ஆளுங்கட்சி சங்கம் 25 சதவீத ஊதிய உயர்வு கோரினர். தற்போது 1.9.2019 - 31.8.2021 வரையிலான காலகட்டத்திற்கு 5 சதவீதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். பே மேட்ரிக்ஸ் கொண்டுவர ஒப்பு கொண்டுள்ளனர்.
4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை எதிர்த்துள்ளோம். ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தோம். தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நிகராக நடத்துநர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஊதியம் கொடுக்க கோரிக்கை விடுத்தோம். தோழமைச்சங்கங்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்வோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு 'அல்வா' கொடுத்ததாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் நூதனப்போராட்டம்!