சென்னை:எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, "தீபாவளியையொட்டி சொந்த ஊர் செல்கின்ற பொதுமக்களுக்கு தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று (அக். 28) அரசு போக்குவரத்து சார்பாக போக்குவரத்துக்கு தேவையான வாகனங்கள் இயக்குவதற்கு ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று இன்று (அக். 28) ஆம்னி பேருந்துகள், இந்த தீபாவளி பண்டிகையையொட்டி இயங்கக்கூடிய செயல்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை சார்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோன்று கூட்டம் நடத்தப்பட்ட போது, பொதுமக்களின் நலன் கருதி ஆம்னி உரிமையாளர்களிடம் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு இணங்கி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 25 சதவீதம் கட்டணத்தை குறைத்து பேருந்துகளை இயக்கினார்கள்.
வருகின்ற தீபாவளியையொட்டி இந்தாண்டும் விலையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக ஐந்து சதவீதம் குறைத்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு 25% குறைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.