தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இருப்பினும் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று(மே.8) காலை கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமலுக்குவருவதால் இன்றும், நாளையும்(மே.9) பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் தமிழ்நாடு அரசின் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பேருந்துகளில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கூட்டணி நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து முன்பதிவிற்கு தமிழ்நாடு போக்குவரத்து துறையின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.